செய்திகள்

தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா

Published On 2017-01-19 11:07 GMT   |   Update On 2017-01-19 11:07 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ‘ஏறு தழுவுதல்‘ எனும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி, இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடத்தப்பட்டது. இரவு விடிய விடிய நடந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி ஜல்லிக்கட்டை ஆதரித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்றும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் மறித்தனர். இதையடுத்து கோவிலின் தென்புறம் ரத வீதியில் அமர்ந்து அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் அனைவரையும் விடுவித்தனர்.

நேற்று 2-வது நாளாக கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 3-வது நாளாக இன்று இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நாசரேத் சந்தை ரோட்டில் நாசரேத் நகர நாம் தமிழர் கட்சி தலைவர் விஜய்ஆனந்த் தலைமையில் தொழிலதிபர் ராஜா முன்னிலையில் இளைஞர்கள், பெரியவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இயற்கை ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். முடிவில் ரவி செல்வக்குமார் நன்றி கூறினார்.

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News