செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கோரி திருப்பூர் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்

Published On 2017-01-19 10:59 GMT   |   Update On 2017-01-19 10:59 GMT
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, அவினாசி, மடத்துகுளம், தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஆங்காங்கே காளைகளுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டமும் நடந்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இரவு முழுவதும் அங்கேயே தங்கி கடுங்குளிரிலும் விடிய விடிய அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதாகைகளை வைத்து கொண்டு கோ‌ஷமிட்டனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

மாநகராட்சி அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுடன் பள்ளி மாணவர்களும் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்டனர்.

மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதேபோல் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் போராட்டத்தையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Similar News