செய்திகள்

நாமக்கல்லில் தீபா ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடங்கினர்

Published On 2017-01-13 10:43 GMT   |   Update On 2017-01-13 10:44 GMT
அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை நாமக்கல்லில் தீபா ஆதரவாளர்கள் தொடங்கினர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் தீபா அ.தி.மு.க.விற்கு ஆதரவு பெருகி வருவதால் அ.தி.மு.க.வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபாவிற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் புதிது புதிதாக தீபா ஆதரவாளர்கள் தீபா பெயரில் பேரவையை தொடங்கி தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை நேற்று நாமக்கல்லில் தீபா ஆதரவாளர்கள் தொடங்கினர். இதற்கான கூட்டம் திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நேற்று நடைபெற இருந்தது.

கூட்டம் நடத்த சில மணி நேரங்களே இருந்த நிலையில் அ.தி.மு.க. எதிர்ப்பு காரணமாக கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியதை தொடர்ந்து மோகனூர் அருகே உள்ள நெய்க்காரன்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. நாமக்கல், மோகனூர், பரமத்திவேலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான தீபா ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர்.

கூட்டத்தில் பேசியவர்கள் அனைவரும் அ.தி.மு.க. தலைமைக்கு எதிராகவும், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கடுமையாக சாடியதால் கூட்டத்தில் கடைசி வரை பெரும் பரபரப்பு நிலவியது.

மறைந்த முன்னாள் முதல்வருக்கு இரங்கல் தெரிவித்தும், தீபாவை அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தலைமை ஏற்கவும், தீபாவிற்கு பிரதமர் மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தி அம்மா இல்லமாக அறிவிக்க வேண்டும்.

ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை விபரங்களை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிளிப்பான் தலைமையில் ஒரு அணியினர் தீபா பேரவை ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

இதன் முன்னோட்டமாக ஒன்றிய பொறுப்பாளர் பிலிப்பான், மோகன், கண்ணன், நடராஜ் ஆகியோர் ஏற்காட்டிலுள்ள 67 கிராமங்களிலும் இருந்து தீபா பேரவைக்காக உறுப்பினர்களை சேர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஏற்காடு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஊறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தி.மு.க. முன்னாள் வார்டு கவுன்சிலர் அய்யனார் என்பவருக்கு முதல் உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு தொடர்ந்து உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டது.

Similar News