செய்திகள்
தீவிரவாதி தாவூத் சுலைமான் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்ட போது எடுத்த படம்.

குண்டு வெடிப்பு வழக்கு: கைதான தீவிரவாதிகள் வீடுகளில் செல்போன்கள், வெடிமருந்து பறிமுதல்

Published On 2016-12-04 06:53 GMT   |   Update On 2016-12-04 06:53 GMT
குண்டு வெடிப்பு வழக்கில் கைதான மதுரையில் வசித்து வந்த தீவிரவாதிகள் வீடுகளில் என். ஐ.ஏ. அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது செல்போன், சிம்கார்டு, வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை:

கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் பல பகுதிகள் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் இக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்டன.

இந்த நிலையில் இவ்வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது மதுரையை சேர்ந்த சிலர் இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து என். ஐ.ஏ. அதிகாரிகள் மதுரைக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்து ரகசியமாக கண்காணித்து விசாரணை நடத்தியதில் மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த அப்பாஸ் அலி, மண்மலை மேடு பகுதியை சேர்ந்த சம்சும்கரீம் ராஜா, ஜி.ஆர்.நகரை சேர்ந்த முகமது அயூப்அலி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் படி சென்னையில் தங்கி இருந்து வேலைபார்த்து வந்த மதுரை கரீம்ஷா பள்ளி வாசல் பகுதியை சேர்ந்த தாவூத் சுலைமான் என்பவரையும் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரையும் பெங்களூருக்கு கொண்டு சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் என்.ஐ.ஏ. கண்காணிப்பாளர் பிரதீபா தலைமையில் கொச்சி மற்றும் ஐதராபாத்தில் இருந்து வந்த அதிகாரிகள் மதுரையில் உள்ள தாவூத்சுலைமான் வீட்டுக்குள் சென்று சோதனையிட முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் உள்ளூர் போலீசாரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடினர். இதையடுத்து 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சில போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சுவுந்திரபாண்டியன், கிராமஉதவியாளர் பாஸ்கரன் அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 6 செல்போன் மற்றும் சிம்கார்டு, மெமரிகார்டு, சிக்கியது. இதே போல் கரீம் ராஜா வீட்டில் சோதனை நடத்தியபோது வெடி மருந்து, புத்தகம் இருந்தது தெரியவந்தது. இவைகள் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த அதிரடி சோதனை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடந்தது.

இச்சோதனையின் போது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாக 40-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Similar News