செய்திகள்

தேனி - திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை

Published On 2016-12-03 04:04 GMT   |   Update On 2016-12-03 04:04 GMT
தேனி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்:

தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வடகிழக்கு பருவமழையை விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையும் தாமதமானது. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சி நீடித்தது. விவசாய நிலங்கள் கருகின.

பொதுமக்கள் குடிநீருக்காக சாலையில் போராட்டம் நடத்தும் அளவிற்கு வறட்சி ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்க கடலில் நடா புயல் சின்னம் உருவானது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும் இரவில் பனியும் அடித்து வந்தது. தற்போது 2 நாட்களாக சாரல் மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் பெரிய குளம், ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி, தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கும் இது ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர். மழை தொடர வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் பெய்த சாரல் மழையால் கடும் குளிர் அடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு மேக மூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர். மழையால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுகின்றன. இதனால் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனை ஊழியர்கள் சரி செய்தனர்.

அய்யலூர், வடமதுரை, எரியோடு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகி வருவதை கண்டு வேதனையடைந்து வந்தனர்.

தற்போது பெய்த மழையால் அவை மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. இந்த மழை தொடர்ந்தால் சாகுபடி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். மாவட்டத்தின் பிற பகுதியான நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, திண்டுக்கல், வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் பெய்த சாரல் மழை பூமியை குளிர செய்தது.

Similar News