செய்திகள்

நாட்டறம்பள்ளி காட்டு பகுதியில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாட்டத்தால் பீதி

Published On 2016-10-27 08:48 GMT   |   Update On 2016-10-27 08:48 GMT
நாட்டறம்பள்ளி காட்டுப்பகுதியில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் காட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


நாட்டறம்பள்ளி:

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்ட எல்லையில் நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் என்ற கிராமம் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தின் அருகே இந்த ஊர் உள்ளது. மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் உள்ளன. குறிப்பாக மலைஅடிவாரத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. வனத்துறையினரும் அடிக்கடி அவற்றை விரட்டி வந்தனர்.

வெலக்கல்நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அங்குள்ள தலைகாப்பு மலை பகுதியில் உள்ள காடுகளில் ஆடுகள் மேய்த்து வருகிறார்கள். இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் பாறைகள் அதிகமாக உள்ளன. அங்கு ஆடுகள் மேய்த்தபோது ஒவ்வொரு நாளும் ஆடுகள் காணாமல் போனது. இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே ஆடுமேய்ப்பவர்கள் பாறைகள் மீது அமர்ந்து கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு சிறுத்தைபுலி நடமாடுவதை பார்த்துள்ளனர். கடந்த 4 நாட்களாக சிறுத்தை புலி நடமாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பரமசிவம் தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வெலக்கல்நத்தம் பகுதியில் முகாமிட்டு பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைபுலி வராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் தலைமலை காட்டு பகுதியில் 2 சிறுத்தைபுலிகள் நடமாடுவதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனால் அவர்கள் பீதி அடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறை அலுவலர்கள் அந்தப்பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்கள் உதவியுடன் தீப்பந்தம் கொளுத்தி சிறுத்தைபுலிகளை காட்டுப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

திருப்பத்தூர் உதவி கலெக்டர் அப்துல்முனீர், மாவட்ட வன அலுவலர் தேஜாஸ்ரீ மற்றும் வனத்துறையினர் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ள பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிறுத்தைப்புலி நடமாட்டத்தை நேரில் பார்த்தவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது கூண்டுவைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து திருப்பத்தூர் வன அலுவலர் பரமசிவம் தலைமையில், வனத்துறையினர் அப்பகுதியில் இரவு, பகலாக முகாமிட்டு சிறுத்தைபுலி குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க தாரை, தப்பட்டை அடித்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் காட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News