செய்திகள்

கல்லிடைக்குறிச்சி பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டு மோசடி - ஜார்க்கண்ட்டை சேர்ந்த தந்தை- மகன் கைது

Published On 2016-10-25 11:52 GMT   |   Update On 2016-10-25 11:52 GMT
கல்லிடைக்குறிச்சி பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டு மோசடி செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தந்தை- மகனை பேலீசார் கைது செய்தனர்.
அம்பை:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள சிங்கம்பட்டியை சேர்ந்தவர் யூசுப். இவரது மனைவி பதர்நிஷா (வயது 38). கல்லிடைக்குறிச்சி புதுமனை தெருவை சேர்ந்தவர் முருகன் (46). இவர்கள் இருவரும் அப்பகுதியில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி பதர்நிஷா மற்றும் முருகனிடம் வங்கி மேலாளர் பேசுவதாக கூறிய மர்ம நபர்கள் உங்களது ஏ.டி.எம்.கார்டு காலாவதியாகி விட்டது. எனவே புதுப்பிக்க ஏ.டி.எம்.கார்டு எண் மற்றும் ரகசிய எண் ஆகியவற்றை தாருங்கள் என கேட்டு வாங்கினர்.

பின்னர் அவர்களது வங்கி கணக்குகளில் இருந்த மொத்தம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை அவர்கள் சுருட்டினர். தனது வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் மோசடி நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பதர்நிஷா கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே மர்ம நபர்கள் ஜார்க்கண்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. பின்னர் ஜார்க்கண்ட் சென்ற தனிப்படை போலீசார் அங்குள்ள போலீசார் உதவியுடன் மர்ம நபர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜார்கண்டை சேர்ந்த சம்சுதீன் மியான் ( 55), அவரது மகன் பக்ருதீன் மியான் (24) என்பது தெரிய வந்தது. இருவரையும் தனிப்படை போலீசார் கல்லிடைக்குறிச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்களுடைய கூட்டாளி ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு வாலிபர் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வாலிபரையும் பிடிக்க தனிப்படை போலீசார் திருப்பூருக்கு விரைந்துள்ளனர். மேலும் இந்த கும்பல் வேறு யாரிடமாவது இது போன்று நூதன மோசடியில் ஈடுபட்டார்களா? என தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News