செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் நாளை மனுத்தாக்கல் தொடக்கம்

Published On 2016-10-25 06:02 GMT   |   Update On 2016-10-25 06:03 GMT
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் நாளை (26-ந்தேதி) தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் மற்றும் பா.ம.க. வேட்பாளர் செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் நாளை (புதன்கிழமை) முதல் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் அதிகாரி ஜீவா, உதவி அலுவலர்கள் முருகையன், சரவணப்பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளை முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய கட்சி வேட்பாளர்கள் 27, 28-ந்தேதிகளில் மனுத்தாக்கல் செய்ய ஆலோசித்து வருகிறார்கள். சில சுயேட்சை வேட்பாளர்கள் நாளை மனுத்தாக்கல் செய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றம் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 97 இடங்களில் நகர் பகுதிகளில் 159, புறநகர் பகுதிகளில் 132 என மொத்தம் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஆயிரத்து 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 375 கட்டுப்பாட்டு கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் முதல் நிலை பரிசோதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நடந்தது.

Similar News