செய்திகள்

தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2016-10-08 09:31 GMT   |   Update On 2016-10-08 09:31 GMT
தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஊட்டியில் குவிந்துள்ளனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுவது வழக்கம்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் 2-வது சீசன் நடந்து வருகிறது. அரசு தாவரவியல் பூங்காவில் 3½ லட்சம் மலர்கள் பூத்துக்குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இது தவிர மலர் கோபுரம், மலர் பாத்திகளில் பல வண்ண மலர்கள் கண்ணை கவர்வதாக உள்ளது. இன்காம் மேரிகோல்டு, ஆப்பிரிக்கன் மேரி கோல்டு, பேன்சி, பிகோனியா உள்ளிட்ட மலர்கள் சுற்றுலா பயணிகளை அழகாக வரவேற்கிறது.

முதுமலையில் கடந்த 3 மாதங்களாக கன மழை பெய்தது. அந்த பகுதி சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் கடந்த 3 மாதங்களாக யானை சவாரி ரத்து செய்யப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியதால் நேற்று மாலை முதல் யானை சவாரி தொடங்கியுள்ளது. யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். முகாமில் 24 வளர்ப்பு யானைகள் உள்ளன. அவைகளுக்கு மாலை நேரங்களில் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக கண்டு ரசிக்கிறார்கள்.

இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்துள்ளதால் நீலகிரி மாவட்டமே களை கட்டியுள்ளது. சுற்றுலா தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Similar News