செய்திகள்

கல்வி கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்த கூடாது: பள்ளி-கல்லூரி நிர்வாகத்துக்கு கவர்னர் எச்சரிக்கை

Published On 2016-10-03 12:15 GMT   |   Update On 2016-10-03 12:15 GMT
தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு துன்புறுத்த கூடாது என புதுவை கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னராக கிரண்பேடி பதவி ஏற்றது முதல் தினமும் மாலையில் கவர்னர் மாளிகையில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். அப்போது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சிலர் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி கட்டணம் கேட்டு மாணவர்களை நேரடியாக துன்புறுத்துவதாகவும் இதனால் மாணவ-மாணவிகள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும், தற்கொலை செயலிலும் ஈடுபடுவதாக கவர்னரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அரசின் உயர்கல்வி துறை சுகாதாரத்துறை செயலாளர்களை அழைத்து கவர்னர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு துன்புறுத்த கூடாது என்று அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார். மற்ற மாணவர்கள் முன்னிலையில் கல்வி கட்டணம் கேட்டு கண்டிப்பதால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என அனைத்து கல்வி கட்டணத்தை மாணவர்களின் பெற்றோரை அழைத்து கேட்க வேண்டும் என பள்ளி-கல்லூரி நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி அறிவுறுத்தினார்.

புதுவை மாநிலத்தில் இருந்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் ஒரே கல்வி கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கேட்டுக்கொண்டார்.

Similar News