செய்திகள்

திருச்சியில் அமைச்சரை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்

Published On 2016-09-27 10:48 GMT   |   Update On 2016-09-27 10:49 GMT
திருச்சியில் இன்று அமைச்சரை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:

உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் போட்டியிடும் 65 வார்டுகளுக்கான வேட்பாளர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதில் 40 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 22 முன்னாள் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு 2500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்தவர்களில் பலர் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதில் 55-வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த ஈஸ்வரிக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் பலர் இன்று திருச்சி புத்தூரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதேபோல் 8-வது வார்டில் சுதாகர் என்பவருக்கு சீட் கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள் கண்ணை கட்டிக்கொண்டு அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்து போராட்டம் நடத்தினர். மேலும் 15,21-வது வார்டு நிர்வாகிகளும், தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படாததை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் காரில் வந்தார். அவரது காரை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அமைச்சர், அங்கு அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

Similar News