செய்திகள்

12வது சீசன் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல்

Published On 2018-04-26 13:39 GMT   |   Update On 2018-04-26 13:39 GMT
அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #IPL2019 #UAE #GeneralElections

புதுடெல்லி:  

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள், அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி தொடங்கி, மே 19-ம் தேதி வரை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்நேரத்தில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அதன்படி ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும், 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வார ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.

அதேபோல அடுத்த ஆண்டும், சில போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில், மீதமுள்ள போட்டிகளை இந்தியாவிலும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே இதுகுறித்து முடிவு செய்ய முடியும். 2009-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் ஐபிஎல் போட்டிகளைப் போலவே, அடுத்த ஆண்டும் தென்னாப்பிரிக்காவில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #IPL2019 #UAE #GeneralElections
Tags:    

Similar News