செய்திகள்

ஒலிம்பிக் தங்கப்பதக்க கனவு நிறைவேறவில்லை - மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேதனை

Published On 2018-03-21 00:26 GMT   |   Update On 2018-03-21 00:26 GMT
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை என்று இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான சுஷில்குமார் 2008-ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார். சக வீரர் நார்சிங் யாதவுடன் ஏற்பட்ட தேர்வு பிரச்சினை காரணமாக 2016-ம் ஆண்டில் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் சுஷில்குமார் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் 3-வது ஒலிம்பிக் பதக்கத்தை குறிவைத்து சுஷில்குமார் மல்யுத்த களத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

டெல்லியை சேர்ந்த 34 வயதான சுஷில்குமார் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கும் காமல்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்த பந்தயத்தில் பிரீஸ்டைல் 66 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்கிறார். இந்த போட்டி குறித்து சுஷில்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மல்யுத்த போட்டியில் ஈடுபட தொடங்கியதில் இருந்து எனது ஒரே நோக்கம் என்னவென்றால் நாட்டுக்காக சர்வதேச போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது தான். எப்போதெல்லாம் நான் உடல் தகுதியுடன் இருந்தேனோ? அப்போது எல்லாம் களத்தில் எனது முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் யாரிடமும் எதனையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

நான் இரண்டு ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுள்ளேன். ஆனாலும் எனது கனவு இன்னும் நிறைவேறவில்லை. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் எனது ஒலிம்பிக் தங்கப்பதக்க கனவை நெருங்கி வந்தாலும் வெள்ளிப்பதக்கத்தை தான் வென்றேன். ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்காக தங்கப்பதக்கத்தை வென்று கொடுப்பதை எனது கடமையாக கருதுகிறேன்.

என்னை பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நான் சிந்திக்கவில்லை. எனது பணி என்னவென்றால் உடல் தகுதியுடன் இருக்கும் போது, களத்தில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவது தான். நான் எனது வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன். ஒலிம்பிக் பதக்க வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தில் என்னை சேர்க்காததால் வருத்தப்படவில்லை.

இந்த வாரத்தில் ஜார்ஜியா சென்று 10 நாட்கள் பயிற்சியில் ஈடுபட இருக்கிறேன். உடல் நலத்தை சரியாக பேணும் பட்சத்தில் 40 வயது வரை மல்யுத்த போட்டியில் நீடிக்கலாம். கடந்த 4 ஆண்டுகளாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் வரும் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News