செய்திகள்

5-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Published On 2018-02-19 19:51 GMT   |   Update On 2018-02-19 19:51 GMT
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #AFGvZIM #ZIMvAFG
சார்ஜா:

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2 டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதலாவது, மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வேவும் வெற்றி பெற்றன.



இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று சார்ஜாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமத் ஷசாத்தும், ஜாவித் அகமதியும் களமிறங்கினர். ஷசாத் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜாவித் அகமதியுடன், ரஹ்மத் ஷா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். ரஹ்மத் ஷா 59 ரன்களிலும், ஜாவித் அகமதி 76 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்தவர்கள்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ரஷித் கான் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஆப்கானிஸ்தான் அணி 503 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணி பந்துவீச்சில் டெண்டாய் சதாரா, பிளெஸ்சிங் முசாரபனி, சிகந்தர் ரசா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

அடுத்ததாக 242 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் ஹமில்டன் மசகாட்சா, தரிசாய் முசாகண்டா ஆகியோர் களமிறங்கினர். மசகாட்சா 7 ரன்களிலும், தரிசாய் முசாகண்டா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிரண்டன் டெய்லர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
அவரைத்தொடர்ந்து கிரேக் எர்வின் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே அணி 32.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் ரஷித் கான் 3 விக்கெட்களும், ஷரபுதின் அஷ்ரப், மொகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதன்மூலம், 146 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணியின் ஷரபுதின் அஷ்ரப் ஆட்டநாயகனாகவும், ரஷித் கான் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். #AFGvZIM #ZIMvAFG #Afghanistan #Zimbabwe
Tags:    

Similar News