செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் களம் திரும்புகிறார்

Published On 2018-01-11 05:34 GMT   |   Update On 2018-01-11 05:34 GMT
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 6 மாதமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்த ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார்.
மெல்போர்ன்:

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 6 மாதமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்து வந்த ஜோகோவிச் (செர்பியா) மெல்போர்னில் நேற்று நடந்த காட்சி போட்டியில் 6-1, 6-4 என்ற நேர்செட்டில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) தோற்கடித்தார். முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான ஜோகோவிச் அளித்த பேட்டியில், ‘இது சிறப்பான ஒரு தொடக்கம். மீண்டும் களம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார். இதன் மூலம் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் களம் இறங்குவது உறுதியாகி இருக்கிறது.

ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய நிலையில் ஜோகோவிச் மீண்டும் களம் திரும்ப இருப்பது போட்டி அமைப்பாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்து இருக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆடாத நிலையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) குடும்ப பிரச்சினை காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். 
Tags:    

Similar News