செய்திகள் (Tamil News)

டென்னிஸ் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடிக்கிறார் நடால்

Published On 2017-08-16 03:29 GMT   |   Update On 2017-08-16 03:29 GMT
சின்சினாட்டி டென்னிசில் விளையாட இயலாது என ரோஜர் பெடரர் கடைசி நேரத்தில் கூறிவிட்டதால், டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு நடாலுக்கு பிரகாசமாகியுள்ளது.
சின்சினாட்டி:

ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மான்ட்ரியல் போட்டியில் விளையாடவில்லை. தற்போது அமெரிக்காவின் சின்சினாட்டியில் தொடங்கியுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார். இதனால் அவரது ‘நம்பர் ஒன்’ இடம் பறிபோகிறது. தற்போது 2-வது இடத்தில் இருக்கும் 15 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக மறுபடியும் முதலிடத்தை பிடிக்கிறார். புதிய தரவரிசை அடுத்த வாரம் வெளியாகும்.

3-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதுகுவலியால் அவதிப்படுவதால் சின்சினாட்டி டென்னிசில் விளையாட இயலாது என்று கடைசி நேரத்தில் கூறி விட்டார். இதில் பெடரர் பங்கேற்று இருந்தால் இந்த தொடரின் வெற்றி பெடரருக்கும், நடாலுக்கும் இடையே ‘நம்பர் ஒன்’ இடத்தை தீர்மானிக்கும் வகையில் அமைந்திருக்கும். பெடரரின் விலகலால் நடாலின் முதலிடம் சிக்கலின்றி உறுதியாகி விட்டது.

31 வயதான நடால் கூறுகையில், ‘சின் சினாட்டி டென்னிசில் பெடரர் விளையாடாதது என்பது வருத்தமான செய்தி. நம்பர் ஒன் இடத்துக்கு மீண்டும் திரும்புவது என்னை பொறுத்தவரை சிறப்பு வாய்ந்த ஒன்று’ என்றார்.
Tags:    

Similar News