செய்திகள்

ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கில் சேவாக், ஆக்ரோஷத்தில் விராட் கோலியாம்: சகோதரி சொல்கிறார்

Published On 2017-07-21 15:05 GMT   |   Update On 2017-07-21 15:06 GMT
பெண்கள் உலகக் கோப்பையில் 115 பந்தில் 171 ரன்கள் குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கில் சேவாக், ஆக்ரோஷத்தில் விராட் கோலி என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் பெண்கள் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. இதற்கு ஹர்மன்ப்ரீத் கவுரின் அதிரடி ஆட்டம்தான் முக்கிய காரணம்.

90 பந்தில் சதம் அடித்த அவர், அதன்பின் ருத்ர தாண்டவம் ஆடினார். கடைசி 7 ஓவரில் 25 பந்துகளை சந்தித்து 71 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகள், 5 சிக்சர்களும் அடங்கும். வலுவான ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு எதிராக திறமையாக விளையாடிய கவுருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகாவில் உள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் வீட்டின் முன்பு கூடி, குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது சகோதரி ஹெம்ஜித், ஹர்மன்ப்ரீத் கவுரை சேவாக் மற்றும் விராட் கோலியுடன் ஒப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஹெம்ஜித் கூறுகையில் ‘‘ஹர்மன்ப்ரீத் சிறுவயதில் பையன்களுடன் சேர்ந்துதான் விளையாடுவார். ரன் குவிக்க வேண்டும் என்ற அவரது தீராத வேட்கை என்றுமே தேய்ந்து போனதல்ல. அவரது ஸ்ட்ரைக் ரேட்டில் அது பிரதிபலிக்கும்.

அவர் எப்போதும் நேர்மறையாக சிந்திப்பவர். கிரிக்கெட் மைதானத்திற்குள் விராட் கோலியை போல் ஆக்ரோஷமாக செயல்படுவார். எனினும், மைதானத்திற்கு வெளியே. அமைதியாக இருப்பார். அவர் எப்போதும் விராட் கோலியை லட்சிய மனிதராக நினைத்துக் கொள்வார். சேவாக்தான் அவரது பேட்டிங்கிற்கு முன்னோடி. அவரைப் போல் பேட்டிங் செய்ய விரும்புவார். மழைக் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடித்திருப்பார்’’ என்றார்.
Tags:    

Similar News