செய்திகள்

ஜமைக்கா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 286-ல் ஆல்அவுட்; பாகிஸ்தான் 201/4

Published On 2017-04-24 02:51 GMT   |   Update On 2017-04-24 02:51 GMT
ஜமைக்காவில் நடைபெற்று முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களில் ஆல்அவுட் ஆனது. மொகமது ஆமிர் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கடந்த 21-ந்தேதி ஜமைக்கா கிங்ஸ்டன், சபினா பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் பீல்டிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையினால் பாதிக்கப்பட்டது. 11.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதில் 2 விக்கெட்டுக்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சேஸ் (63), டவ்ரிச் (56), ஹோல்டர் (57 அவுட் இல்லை) ஆகியோர் அரைசதம் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமிர் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அசார் அலி, அகமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 15 ரன்னிலும், அகமது ஷேசாத் 31 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பாபர் ஆசம் (72), யூனிஸ்கான் (58) அரைசதம் அடிக்க பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போது வரை பாகிஸ்தான் 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால், இந்த டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Similar News