செய்திகள்

இந்திய குடிமகன் அந்தஸ்து பெற்ற ஆஸி வீரர் ஷான் டெய்ட்

Published On 2017-03-25 00:06 GMT   |   Update On 2017-03-25 00:06 GMT
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெய்ட் இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனால் இவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கான்பரா:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெயிட் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் (Overseas Citizen of India - OCI) என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனை அவரே தனது ட்விட்டரின் மூலம் உறுதி செய்துள்ளார். வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் அட்டையின் புகைப்படத்தை ஷான் டெயிட் சமீபத்தில் ட்விட்டரில் பதிவு செய்ததை தொடர்ந்து அவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஷான் டெயிட் இந்திய மாடல் அழகி மஷூம் சிங்கா என்பவருடன் பழகி வந்தார். பின் 2014 ஆம் ஆண்டில் ஷான் டெயிட் மற்றும் மஷூம் சிங்கா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தற்சமயம் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் அந்தஸ்து பெற்றுள்ள ஷான் டெயிட் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறைகளின் படி 2020 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய அணிக்காக விளையாட முடியும். எனினும் 2020-இல் ஷான் டெயிட் வயது 38 என்றாகி இருக்கும் என்பதால் அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவாரா, விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.



2007 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பான பந்து வீசிய டெயிட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிவேக பந்து வீச்சை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை தொடரில் 23 விக்கெட்களுடன், இலங்கை அணியில் முத்தையா முரளிதரனுடன் இணைந்து இரண்டாவது அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

சிறப்பான பந்து வீச்சை வழங்கிய போதும் தொடர்ச்சியான காயங்களினால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழலை எதிர்கொண்ட டெயிட் 2007 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இறுதியாக இந்தியாவுக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் டெயிட் களம் இறங்கினார்.

Similar News