செய்திகள்

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் போட்டிக்கான மனு தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது: அசாருதீன்

Published On 2017-01-14 11:34 GMT   |   Update On 2017-01-14 11:34 GMT
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவருக்கான மனுவை தள்ளுபடி செய்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்

இந்திய அணி முன்னாள் கேப்டனான அசாருதீன், 1992, 1996, 1999 என தொடர்ந்து 3 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். கடந்த 2000-ஆம் ஆண்டில் சூதாட்ட விவகாரம் ஒன்றில் அசாருதீனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய பிசிசிஐ, அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடிய அசாருதீனுக்கு, சாதகமாக தீர்ப்பளித்தது ஆந்திர உயர் நீதிமன்றம். எனினும், அவர் மீதான தடையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக நீக்கவில்லை.

17-ந்தேதி நடக்கவிருக்கும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு முகமது அசாருதீன் போட்டியிடுவதற்கு முடிவு செய்தார். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் மனுதாக்கல் செய்தார்.

இன்று அவரது மனு நிராகரிக்கபட்டதாக கூறப்படுகிறது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நெருங்கிய வட்டாரங்கள் வெளியிட்டு உள்ள தகவலில் சங்க தேர்தல் அதிகாரி கே. ராஜீவ் ரெட்டியால் அசாருதீன் வேட்பு மனு நிராகரிக்கபட்டதாக கூறப்படுகிறது.

தனது மனு நிராகரிக்கபட்டது குறித்து அசாருதீனிடம் கேட்டபோது ‘‘எனக்கு வருத்தமாகவும், இந்த நிராகரிப்பு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நான் குற்றமற்றவன் என கோர்ட் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்.

இதுகுறித்து முன்னாள் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அர்ஷாத் ஆயுப் கூறுகையில் ‘‘ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் பி.சி.சி.ஐ.யிடம் இருந்து அசாருதீன் தடை நீக்கத்திற்கான உத்தரவை இன்னும் பெறவில்லை. அவர் பி.சி.சி.ஐ.யிடம் இருந்து தடை நீக்கத்திற்கான உத்தரவை பெற்றால் போட்டியிடலாம்.

மேலும், ஐதராபாத் சங்கத்தின் சட்டபடி ஒரு நபர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென்றால் ஒருமுறையாவது செயற்குழு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் ஒருமுறை அதிகாரி அளவிளான பதவியில் இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் அவர் செய்திருக்கவில்லை’’ என்றார்.

Similar News