செய்திகள்

10 பேர் டக் அவுட் ஆகியும் வெற்றி பெற்ற அணி: கிரிக்கெட் அதிசயம்

Published On 2016-12-16 14:02 GMT   |   Update On 2016-12-16 14:03 GMT
தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட்டில் 10 பேர் டக்அவுட் ஆன போதிலும், அந்த அணி வெற்றி பெற்று அதிசயத்தை நிகழ்த்தி உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒரு போட்டியில் புமலங்கா - ஈஸ்டர்ன்ஸ் அணி மோதின.

புமலங்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. உள்ளூர் போட்டி என்பதால் 12 பேர் விளையாடலாம். அந்த அணியின் தொடக்க வீரர் ஷானியா-லீ ஸ்வாட்டை தவிர மற்ற அனைத்து வீராங்கனைகளும் டக்அவுட் ஆகினர்.



ஷானியா மட்டும் அதிரடியாக விளையாடி 160 ரன்கள் குவித்தார். உதிரியாக 9 ரன்கள் கிடைக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தது. ஷானியா அவுட்டாகாமல் 86 பந்தில் 18 பவுண்டரி, 12 சிக்சரடுன் 160 ரன்கள் சேர்த்தார்.



பின்னர் களம் இறங்கிய ஈஸ்டர்ன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் புமலங்கா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு அணியில் ஒருவரைத் தவிர மற்ற 10 பேர் டக்அவுட் ஆன நிலையில் அணி வெற்றி பெற்றது கிரிக்கெட் அதிசயம் என கூறப்படுகிறது.

Similar News