செய்திகள்

2-வது டெஸ்ட்: 5 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்

Published On 2016-11-18 11:10 GMT   |   Update On 2016-11-18 11:10 GMT
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 455 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக விராட் கோலி 167 ரன்கள் அடித்தார். புஜாரா 119 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி, ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் 3-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் க்ளீன் போல்டானார். அடுத்து ஹமீத் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கும்போது ஹமீத் ரன்அவுட் ஆனார். அதன்பின் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. டக்வெட் (5), மொயீன் அலி (1) மற்றும் ஜோ ரூட் (53) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 80 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து விளையாடியது. ஸ்கோரை உயர்த்தவில்லை என்றாலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இதனால் இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 49 ஓவர்கள் விளையாடி 103 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது. பென் ஸ்டோக்ஸ் 12 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளைய ஆட்டம் தொடங்கியதும் இந்த விக்கெட்டை விரைவில் பிரித்து விட்டால் இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்குள் சுருட்டி விடலாம்.

Similar News