செய்திகள்

இறுதிப் போட்டியில் வெல்வது யார்?: இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்

Published On 2016-10-28 07:39 GMT   |   Update On 2016-10-28 07:39 GMT
இந்தியா-நியூசிலாந்து மோதும் 5-வது ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றும் அணி எது என்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாகப்பட்டினம்:

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் 4 ஆட்டம் முடிந்து உள்ளது. இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

டோனி தலைமையிலான இந்திய அணி 4-வது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி விட்டது. மிடில் ஆர்டரில் உள்ள பேட்ஸ்மேன் நிலைத்து நின்று விளையாடாததால் தோல்வி ஏற்பட்டது. டோனி 4-வது வீரராக களம் இறங்கியும் பலன் இல்லாமல் போனது. இதனை சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கும் ரோகித்சர்மா, ரகானே நல்ல தொடக்கம் அளிக்காதது பாதிப்பாக உள்ளது. இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பந்து வீச்சில் இந்திய வீரர்கள் கடைசி கட்டத்தில் ரன் நிறைய கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பேட்டிங்கில் விராட் கோலி நல்ல நிலையில் உள்ளார். மற்ற வீரர்களும் தங்களது திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நாளைய போட்டியில் வென்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும். எனவே இந்தியா கடுமையாக போராட வேண்டியது முக்கியம்.

தீபாவளி நாளில் நடக்கும் ஆட்டத்தில் தொடரை வென்று ரசிகர்களை இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் திளைக்க வைப்பார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டி தொடரில் தோற்ற நியூசிலாந்து அணி ஒரு நாள் போட்டியில் கடும் சவால் கொடுத்து வருகிறது. அந்த அணி பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், குப்தில், ரோஸ் டெய்லர், டாம் லாதம் போன்ற வீரர்கள் உள்ளனர்.

4-வது ஆட்டத்தில் குப்தில் நல்ல பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். பந்து வீச்சில் டிம் சவுதி, போல்ட், சான்ட்ரா, சோதி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இந்தியாவுக்கு நிகராக போராடி தொடரை சமன் நிலைக்கு கொண்டு வந்து உள்ளனர். இதுவரை இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியதில்லை. அந்த குறையை போக்க நாளைய போட்டியில் வென்று முதல் முறையாக தொடரை வெல்ல ஆர்வத்தில் இருக்கிறது.

Similar News