செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 224 ரன்னில் சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது

Published On 2016-10-23 13:55 GMT   |   Update On 2016-10-23 13:55 GMT
அபுதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 224 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 452 ரன்கள் குவித்தது. அனுபவ வீரர் யூனிஸ் கான் அபாரமாக விளையாடி 127 ரன்கள் அடித்தார். மிஸ்பா உல் ஹக் 96 ரன்னும், அசாத் ஷபிக் 68 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. பிஷூ, பிளாக்வுட் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிளாக்வுட் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பிஷூ 20 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த சேஸ் (22), ஹோப் (11), கேப்ரியல் (13) ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க, கேப்டன் ஹோல்டர் அவுட்டாகாமல் 31 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 228 ரன்கள் குறைவாக எடுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி பாலோ-ஆன் ஆனது. இதனால் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பாலோ-ஆன் கொடுக்காமல் அந்த அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

228 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணியின் ஷமி அஸ்லாம், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷமி அஸ்லாம் 50 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து அசார் அலியுடன் அசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி  அரைசதம் கடந்து 52 ரன்னுடனும், அசாத் ஷபிக் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதுவரை பாகிஸ்தான் 342 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 160 ரன்களுக்கு மேல் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 500 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயிக்கலாம்.

Similar News