செய்திகள்

மாநில பள்ளிகள் விளையாட்டு: சென்னையில் 22-ந்தேதி தொடக்கம்

Published On 2016-10-20 09:10 GMT   |   Update On 2016-10-20 09:11 GMT
தாகூர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் முதலாவது மாநில அளவிலான பள்ளிகள் விளையாட்டுப் போட்டி சென்னையில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
சென்னை:

தாகூர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் முதலாவது மாநில அளவிலான பள்ளிகள் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்தப்போட்டி வருகிற 22-ந்தேதி முதல் நவம்பர் 12-ந்தேதி வரை ரத்தின மங்களத்தில் உள்ள அந்த கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

கூடைப்பந்து, கோகோ, (இருபாலர்), எறிப்பந்து (பெண்கள் மட்டும்), கிரிக்கெட், கைப்பந்து (ஆண்கள் மட்டும்) ஆகிய போட்டிகள் நடக்கிறது. ஒவ்வொரு விளையாட்டிலும் தலா 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தப்போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் போட்டிகள் 22-ந்தேதி முதல் நவம்பர் 12-ந்தேதி வரையும், மற்ற போட்டிகள் நவம்பர் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையும் நடக்கிறது.

இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2½ லட்சம் ஆகும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகை வழங்கப்படும்.

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டி.மாரியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநில பள்ளிகள் விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். தாகூர் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.மாலா தலைமை தாங்குகிறார்.

மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Similar News