செய்திகள்

அடுத்த பாரா ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வேன்: மாரியப்பன் பேட்டி

Published On 2016-09-24 03:43 GMT   |   Update On 2016-09-24 03:43 GMT
அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வெல்வேன்”, என்று சென்னை திரும்பிய மாரியப்பன் கூறியுள்ளார்.
ஆலந்தூர் :

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் சமீபத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சேலத்தை சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையுடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்து இறங்கினார்.

விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பா.பெஞ்சமின், தமிழக விளையாட்டு துறை செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தின் வெளியே வந்த அவருக்கு, நேரு விளையாட்டு அரங்கில் இருந்து வந்திருந்த வீரர், வீராங்கனைகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் தங்கப்பதக்கம் வென்று தந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த மத்திய-மாநில அரசுகள், மத்திய விளையாட்டு ஆணையம், இந்திய பாரா ஒலிம்பிக் சங்கம், பயிற்சியாளர், பெற்றோர், நண்பர்களுக்கு எனது நன்றி.

தமிழக அரசு எனக்கு ரூ.2 கோடி பரிசு தொகையை அறிவித்து உள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2020, 2024-ம் ஆண்டுகளில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று மீண்டும் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்ப்பேன். பாராஒலிம்பிக் போட்டிகளில் முக்கியத்துவம் குறைவாக உள்ளது. மேலும் பலருக்கு ஊக்கம் தந்தால் பல பதக்கங்களை வெல்லலாம். சாதனை படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல’ என்றார்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறுகையில், ‘மத்திய அரசு மாரியப்பனுக்கு ரெயில்வே துறையில் வேலை தர முன்வந்து உள்ளது. தமிழகத்தில் வேலை செய்ய மாரியப்பன் கோரிக்கை விடுத்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும். அவருக்கு தமிழக அரசின் சிறப்பு தொகையாக ரூ.2 கோடி வழங்க, முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். மாரியப்பனுக்கு ‘கேல்ரத்னா’ விருது வழங்க பரிந்துரை செய்யப்படும்’ என்றார். 

Similar News