செய்திகள்

ஆஸ்திரேலியா தொடருடன் இலங்கை அணியின் தொடக்க வீரர் தில்ஷன் ஓய்வு

Published On 2016-08-25 10:23 GMT   |   Update On 2016-08-25 10:23 GMT
இலங்கை அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான திலகரத்னே தில்ஷன் ஆஸ்திரேலியா தொடருடன் ஒருநாள் மற்றும் டி20யில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இலங்கை அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் திலகரத்னே தில்ஷன். இவர் இலங்கை அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடி வருகிறார். ஏற்கனவே, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஆஸ்திரேலியா அணி இலங்கையில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்து, தற்போது ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் தில்ஷன் இடம்பிடித்திருந்தார். இவர் முதல் போட்டியில் 22 ரன்னும், 2-வது போட்டியில் 10 ரன்களும் எடுத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 3-வது போட்டி நடைபெற இருக்கிறது. அதன்பின் நடக்கும் கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் தில்ஷனுக்கு இடமில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியமும், கேப்டன் மேத்யூசும் இளைஞர்களை கொண்ட அணியை 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார்படுத்தும் வேலையில் இருப்பதால் தில்ஷனை நீக்க முடிவு செய்துள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஒருநாள் போட்டி தில்ஷனின் கடைசி ஒரு நாள் போட்டியாகும். அத்துடன் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அடுத்த மாதம் செப்டம்பர் 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதி இரண்டு டி20 போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொண்டபின் டி20 கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் 39 வயதாகும் தில்ஷன் கிரிக்கெட் வாழ்க்கை அடுத்த மாதம் 9-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

கடந்த 3 வருடமாக தில்ஷன் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். 2013-க்குப் பிறகு ஒருநாள் போட்டியில் 49.18 சராசரி வைத்துள்ளார். இந்தியாவில் நடைடிபற்ற டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணியில் அதிகபட்ச ரன்கள் குவித்தவர் இவர்தான். 2015-ம் ஆண்டு மட்டும் ஒருநாள் தொடரில் 1207 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதுவரை 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷன் 22 சதங்களுடன் 10248 ரன்கள் அடித்ததுடன், 106 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 78 டி20 போட்டிகளில் விளையாடி 1884 ரன்கள் அடித்ததுடன், 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

Similar News