செய்திகள்

முடிந்த அளவிற்கு மெய்டன் ஓவர்கள் வீச வேண்டும் என்பதே திட்டம்: வெற்றி ரகசியம் குறித்து உமேஷ் யாதவ்

Published On 2016-07-24 13:56 GMT   |   Update On 2016-07-24 13:56 GMT
பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்காத ஆடுகளத்தில் சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ், அதிக மெய்டன் ஓவர் வீசுவதுதான் திட்டமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவ் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆடுகளம் பொதுவாக ஸ்லோவாக காணப்பட்டது. இதனால் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதேவேளையில் பேட்ஸ்மேன்களும் அதிக அளவில் ரன்கள் குவிக்க இயலாது.

யார் பொறுமையை இழந்து விடுகிறார்களோ அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். இந்த ஆடுகளத்தில் சிறப்பாக பந்து வீசி உமேஷ் யாதவும், முகமது ஷமியும் வெஸ்ட் இண்டீஸை 243 ரன்னில் ஆல் அவுட் ஆக்கி பாலோ-ஆன் செய்தது. இருவரும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டம் வரை 103.2 ஓவர்கள் வீசியுள்ளது. இதில் 34 ஓவர்களை இந்திய பந்து வீச்சாளர்கள் மெய்டனாக வீசியுள்ளனர்.

இந்த வெற்றியின் ரகசியம் குறித்து வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘போட்டி தொடங்கும் முன் நாங்கள் மைதானத்திற்கு வந்து ஆடுகளத்தை பார்வையிட்டோம். அப்போது, பந்து சீம் மற்றும் ஸ்விங் ஆகாவிட்டால் விக்கெட் வீழ்த்த முடியாது என்று உணர்ந்து கொண்டோம். வெப்பம் அதிகமாக இருந்ததால், மிகவம் கடினமாக இருக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரிந்தது.

எவ்வளவு முடியோ அந்த அளவிற்கு மெய்டன் ஓவராக வீச வேண்டும் என்றும், எளிதாக பவுண்டரி விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் நாங்கள் திட்டமிட்டோம். இதுதான் முக்கிய விஷயமாக இருந்தது. இந்த விஷயத்துடன்தான் பயிற்சியாளர் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தினோம். அப்போது 20 விக்கெட்டுக்களை வீழ்த்துவது எளிதானல்ல. ஆகவே, மெய்டன் ஓவர்களை வீசுவது முக்கியமான திட்டமாகியது’’ என்றார்.

Similar News