செய்திகள்

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் தாய்-மகன்

Published On 2016-07-23 23:51 GMT   |   Update On 2016-07-23 23:51 GMT
ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. இதில் தாய், மகன் இருவரும் பங்கேற்க இருக்கும் அரிய நிகழ்வு இந்த முறை அரங்கேற இருக்கிறது.
டிபிலிசி:

ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. இதில் தாய், மகன் இருவரும் பங்கேற்க இருக்கும் அரிய நிகழ்வு இந்த முறை அரங்கேற இருக்கிறது. துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான 47 வயதான நினோ சலுக்வாட்சே 1988-ம் ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக்கில் சோவியத் யூனியன் சார்பில் களம் இறங்கி பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்போட்டிங் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த ஜார்ஜியா அணி சார்பில் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றார். விரைவில் தொடங்க உள்ள ரியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.

8-வது முறையாக ஒலிம்பிக்கில் அடியெடுத்து வைக்கும் நினோ சலுக்வாட்சேவுடன் அவரது மகனான 18 வயது டிசோட்னே மசாவரினியும் கலந்து கொள்கிறார். தனது தாயை போல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

இது குறித்து நினோ சலுக்வாட்சே கருத்து தெரிவிக்கையில், 'எனது மகனுடன் இணைந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருப்பது எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. நாங்கள் எங்களுடைய சிறந்த திறனை வெளிப்படுத்துவோம். குடும்ப உறவு விளையாட்டில் ஒரு பிரச்சினை இல்லை. எனது மகனின் ரசிகன் நான்' என்றார்.

Similar News