இந்தியா
மலைகிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

பினராயி விஜயனை கண்டித்து மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஒட்டிய சுவரொட்டிகள்

Published On 2022-04-04 06:38 GMT   |   Update On 2022-04-04 06:38 GMT
மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து மாவோயிஸ்டுகள் சுவரொட்டி ஒட்டியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் சில்வர் லைன் எனப்படும் அதிவேக ரெயில் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யப்பட்டு நடப்பட்ட எல்லை கற்களையும் போராட்டக்காரர்கள் அகற்றி வருகிறார்கள்.

இதற்கிடையே இத்திட்டத்திற்கு மாவோயிஸ்டு பயங்கரவாத இயக்கத்தினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் இது தொடர்பான சுவரொட்டிகளை அவர்கள் ஒட்டியுள்ளனர்.

கையால் எழுதப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில் மாநிலத்தில் ஆளும் இடது சாரி ஜனநாயக முன்னணியும், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசும் ஒரே கொள்கையை கொண்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் பினராயி விஜயன் அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இத்திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம், என்று குறிப்பிட்டு உள்ளனர்.

கையால் எழுதப்பட்டிருக்கும் இந்த சுவரொட்டிகள் மலை கிராமத்தில் உள்ள கடைகள் மற்றும் பஸ் நிறுத்தங்கள் அருகே ஒட்டப்பட்டு உள்ளது.

மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து மாவோயிஸ்டுகள் சுவரொட்டி ஒட்டியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கோழிக்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிவாஸ் கூறும்போது, மலை கிராமங்களில் சுவரொட்டி ஒட்டிசென்றவர்கள் யார்? என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

இதற்காக அங்கு அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News