செய்திகள்
அஜய் மிஷ்ரா

எனது மகன் அங்கு இல்லை: இருந்திருந்தால் உயிரோடு வந்திருக்க மாட்டான்- மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ரா

Published On 2021-10-03 17:12 GMT   |   Update On 2021-10-03 17:12 GMT
லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், எனது மகன் அந்த இடத்தில் இல்லை என அஜய் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கும், பா.ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மோதல் பின்னர் வன்முறையாக மாறியது.

இதற்கிடையில் துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் சென்ற கார்தான் விவசாயிகள் கூட்டத்திற்கு புகுந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சம்பவ இடத்தில் எனது மகன் இல்லை என் மிஷ்ரா விளக்கம் அளித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எனது மகன் சம்பவ இடத்தில் இல்லை. அவன் அங்கு இருந்திருந்தால் உயிருடன் திரும்பியிருக்க மாட்டான். அவர்கள் மக்களை கொலை செய்தார்கள். காரை சேதப்படுத்தியதுடன், அதற்கு தீவைத்தார்கள். எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. இதனால் எங்களது கார் கூட்டத்திற்குள் புகுந்தது. இருவர் உயிரிழந்தனர். அதன்பின் எங்கள் தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்’’ என்றார்.
Tags:    

Similar News