செய்திகள்
போராட்டம்

சுக்பீர் சிங் பாதலுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரம்- மோகா மாவட்டத்தில் கடும் வன்முறை

Published On 2021-09-02 13:08 GMT   |   Update On 2021-09-02 13:08 GMT
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், போலீஸ்காரர்களை தாக்கியதுடன், சுமார் 15 வாகனங்களை அடித்து நொறுக்கியதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.
மோகா:

பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ‘100 நாட்களில் 100  தொகுதிகளில் யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்புகின்றனர். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சில இடங்களில் வாகனங்களையும் சேதப்படுத்துகின்றனர்.

இந்நிலையில், இன்று மோகா மாவட்டம் தானா மண்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுக்பீர் சிங் பாதல் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 



ஆனால், போலீஸ் பாதுகாப்பை மீறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள், வன்முறையில் இறங்கினர். சிரோமணி அகாலி தளம் கட்சியின் பேனர்கள் மற்றும் கொடிகளை கிழித்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.


போலீஸ்காரர்களை விவசாயிகள் தாக்கி காயப்படுத்தியதாகவும், சுமார் 15 வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும் மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார். 

Tags:    

Similar News