செய்திகள்
கோப்பு படம்

காஷ்மீரில் இன்று ட்ரோன் பறந்ததால் பரபரப்பு

Published On 2021-07-02 10:28 GMT   |   Update On 2021-07-02 10:28 GMT
பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்ட ஒரு ட்ரோன் ஸ்ரீநகர் வரை அத்துமீறி நுழைந்து பறந்துவிட்டு திரும்பி சென்றது.
ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மர்மமாக பறந்து வந்த 2 ட்ரோன்கள் அங்குள்ள விமானப்படைத்தளம் மீது சக்தி குறைந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் ஜம்மு விமானப்படைத்தளத்துக்கு லேசான சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

தேசிய புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் ட்ரோன்களை அனுப்பி தாக்கு தலை நடத்தியது பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் என்று தெரியவந்தது. இதையடுத்து ட்ரோன்களை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளிலும் அடுத்தடுத்து ட்ரோன்கள் பறந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தின. பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்ட ஒரு ட்ரோன் ஸ்ரீநகர் வரை அத்துமீறி நுழைந்து பறந்துவிட்டு திரும்பி சென்றது.

இந்தநிலையில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு பாகிஸ்தானில் இருந்து ஒரு ட்ரோன் எல்லை தாண்டி வந்தது. ஜம்மு பிராந்தியத்தில் ஆர்னியா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லையைத் தாண்டி அந்த டிரோன் வந்தது. ஜம்முவில் உள்ள ராணுவத்தளங்களை குறிவைத்து அந்த ட்ரோன் பறந்தது. சரியான நேரத்தில் அந்த ட்ரோன் வந்ததை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கண்டுபிடித்தனர். அந்த டிரோனை சுட்டு வீழ்த்த சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. ஆனால் அந்த ட்ரோன் மிக வேகமாக பறந்து தப்பியது.

எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து சரமாரியாக சுட்டதால், அந்த ட்ரோன் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பிச் சென்றுவிட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் ட்ரோன்களை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காஷ்மீரில் உள்ள அனைத்து முக்கிய ராணுவத்தளங்களும்  உஷார்படுத்தப்பட்டுள்ளன.
Tags:    

Similar News