செய்திகள்
இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே

காஷ்மீரில் 25 நாட்களாக எல்லையில் தாக்குதல்கள் இன்றி அமைதி - ராணுவ தளபதி நரவனே தகவல்

Published On 2021-03-26 00:54 GMT   |   Update On 2021-03-26 00:54 GMT
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கடைப்பிடிப்பது என இந்தியா, பாகிஸ்தான் அறிவித்தன.
புதுடெல்லி:

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கடைப்பிடிப்பது என இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பு ராணுவமும் முடிவு எடுத்து கடந்த மாதம் அறிவித்தன. இதனால் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த மாதத்தில் (கடந்த 25 நாட்களாக) காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஒரு துப்பாக்கிச்சூடு சத்தம்கூட கேட்கவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அமைதியாக இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இது எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது” என குறிப்பிட்டார்.

மேலும், “நமது முக்கிய பிரச்சினை, அவர்கள் (பாகிஸ்தான்) பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்பதாகும். அதை அவர்கள் நிறுத்தாதவரையில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது” எனவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News