செய்திகள்
தேவகவுடா

பஞ்சாயத்து தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற உழைக்க வேண்டும்: தேவகவுடா

Published On 2021-02-15 02:02 GMT   |   Update On 2021-02-15 02:02 GMT
தொண்டர்கள் கட்சியை வளர்ப்பதுடன், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தொடங்கி வைத்தார்.

பின்னர் தேவகவுடா பேசியதாவது:-

நமது கட்சி சார்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிகப்படியானோர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்கும் சக்தி நமக்கு இருக்கிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியை பற்றி சிலர் தவறாக பேசுகிறார்கள். தேர்தலுக்கு பின்பு நமது கட்சி இல்லாமல் போய் விடும் என்றும் பேசி வருகின்றனர். அதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். 2 தேசிய கட்சிகளும் நமது கட்சி பற்றி தாழ்வாக பேசி வருகின்றனர்.

அவர்களுக்கு மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் கட்சியின் தொண்டர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். இந்த தேர்தலில் அதிக இடங்களில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற ஒவ்வொரு தொண்டரும் உழைக்க வேண்டும். கட்சியை வளர்ப்பதுடன், ஒவ்வொரு தேர்தலிலும் நமது வெற்றிக்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும். தேசிய கட்சிகளுக்கு நமது பலத்தை காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

கல்யாண கர்நாடக பகுதியில் உள்ள ராய்ச்சூர், கலபுரகி, யாதகிரியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளில் வெற்றி பெற்று தேசிய கட்சிகளுக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி சரியான பாடம் புகட்ட வேண்டும். மாவட்ட மற்றும் தாலுகா அளவில் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியை வளர்க்க நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி மற்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை நமக்கு இல்லை. தொண்டர்களே நமது கட்சியின் முழு பலம். நீங்கள் நினைத்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

இவ்வாறு தேவகவுடா பேசினார்.
Tags:    

Similar News