செய்திகள்
சுரங்கத்தினுள் மீட்பு பணி

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 31 ஆக உயர்வு- போர்க்கால அடிப்படையில் தொடரும் மீட்பு பணி

Published On 2021-02-09 14:14 GMT   |   Update On 2021-02-09 14:14 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை வெளியிட்டார்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென பனிப்பாறைகள் உடைந்து கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தபோவன் அணை, அங்குள்ள நீர்மின் திட்ட கட்டமைப்புகள், பாலங்கள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு மின் திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சுரங்கங்களில் சிக்கிக்கொண்டனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்தார்.

பேரிடர் மீட்பு படையினர், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

நேற்று மாலை வரை 26 உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. இன்று மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்பு 31 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை வெளியிட்டார். என்டிபிசி திட்டத்தின் ஒரு சுரங்கத்தில் இருந்து 12 ஊழியர்களும், ரிஷிகங்கா திட்டப் பணியாளர்கள் 15 பேரும் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். என்டிபிசியின் மற்றொரு சுரங்கத்தினுள் 25 முதல் 35 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்ற தகவலை கூறிய அவர், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

இதற்கிடையே தபோவன் சுரங்கத்தில், சேறு சகதிகளை அகற்றிய இடத்திற்கு அப்பால், ட்ரோன் கேமராவை பயன்படுத்தி செல்வதற்கு மீட்புக்குழுவினர் முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. எனவே, சுரங்கத்தினுள் தேங்கி உள்ள சேற்றை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Tags:    

Similar News