செய்திகள்
கல்குவாரி

கர்நாடகத்தில் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக 1,126 வழக்குகள் பதிவு

Published On 2021-01-27 01:47 GMT   |   Update On 2021-01-27 01:47 GMT
கர்நாடகத்தில் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் 1,126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரூ.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு :

சிவமொக்கா மாவட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்குவாரிக்கு வெடிப்பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியது. இதில், 6 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கர்நாடகத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுவதாகவும், அரசின் அனுமதியை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. குறிப்பாக கல்குவாரிகளில் அனுமதியை மீறி வெடிப்பொருட்கள் பயன்படுத்துவதாகவும், இதனால் தான் அடிக்கடி வெடி விபத்துகள் நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளன.

மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளுக்கு பின்னணியில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டவிரோத கல்குவாரி நடத்துபவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்டம் கர்நாடகத்தில் அமலில் இருந்து வருகிறது. ஆனாலும் அனுமதியை மீறி கல்குவாரிகள் செயல்படுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளுக்கு எதிராக ஒட்டு மொத்தமாக 2,452 புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த புகார்கள் மீது கடந்த 5 ஆண்டுகளில் 1,126 வழக்குகளை போலீசார் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கற்களை ஏற்றி சென்று விற்பனை செய்ததாக கடந்த 5 ஆண்டுகளில் 7,936 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக கற்களை ஏற்றி சென்றவர்கள், கல்குவாரிகள் நடத்துபவர்களிடம் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சட்டவிரோத கல்குவாரிகள் நடத்துபவர்கள் அபராதம் மட்டுமே செலுத்துவதாகவும், இதுவரை யாரும் கோர்ட்டு மூலம் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கர்நாடகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிப்பதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Tags:    

Similar News