செய்திகள்
கோப்புப்படம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் - மம்தா பானர்ஜி எச்சரிக்கை

Published On 2020-12-03 22:16 GMT   |   Update On 2020-12-03 22:16 GMT
வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறாவிட்டால் நாடுதழுவிய போராட்டம் நடத்துவோம் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் வாழ்க்கை நிலை எனக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்துகிறது. ஆகவே, மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.

உடனடியாக அந்த சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால், நாங்கள் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இந்த சட்டங்களை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம்.

4-ந்தேதி (இன்று) அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தை கூட்டி உள்ளோம். அதில், அத்தியாவசிய பொருட்கள் சட்டம், சாமானிய மக்களை எப்படி பாதிக்கிறது, விலை உயர்வுக்கு காரணமாகிறது என்பது பற்றி விவாதிப்போம்.

மத்திய அரசு எல்லாவற்றையும் விற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், ரெயில்வே, ஏர் இந்தியா, நிலக்கரி நிறுவனம், பி.எஸ்.என்.எல்., பெல், வங்கிகள் ஆகியவற்றை விற்க முடியாது. இந்த தனியார்மய கொள்கையை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும்.

நாட்டின் கருவூலங்கள், பா.ஜனதாவின் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Tags:    

Similar News