செய்திகள்
டாக்டர் ராஜேந்திர பிரசாத் படத்திற்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை

Published On 2020-12-03 06:37 GMT   |   Update On 2020-12-03 06:37 GMT
நவீன இந்தியாவிற்கான அடித்தளத்தை அமைப்பதில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் வழங்கிய பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று புகழாரம் சூட்டி உள்ளனர்.
புதுடெல்லி:

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராஜேந்திர பிரசாத்திற்கு மரியாதை செலுத்தினர். ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் உருவப்படத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் எளிய வாழ்க்கை மற்றும் உயர்ந்த லட்சியங்கள் மக்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கும், அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் டாக்டர் பிரசாத் ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கியதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் ராஜேந்திர பிரசாத்தின் நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவண்ணம் உள்ளனர். அவரது அரிய புகைப்படங்களையும் வெளியிட்டு அவரை நினைவுகூர்ந்துள்ளனர். 

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ராஜேந்திர பிரசாத் செய்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்றும், ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரரான அவர், நவீன இந்தியாவிற்கான அடித்தளத்தை அமைப்பதில் வழங்கிய பெரும் பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்றும் புகழாரம் சூட்டி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், மகாத்மா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் ஜனாதிபதி ஆனார். 1950 முதல் 1962 வரை ஜனாதிபதியாக இருந்தார். இரு முறை ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News