செய்திகள்
மலபார் கடற்படை போர்ப்பயிற்சி

அரபிக்கடலில் 2-ம் கட்ட ‘மலபார்’ கடற்படை போர்ப்பயிற்சி தொடங்கியது

Published On 2020-11-17 20:48 GMT   |   Update On 2020-11-17 20:48 GMT
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் 2-ம் கட்ட மலபார் கடற்படை போர்ப்பயிற்சி அரபிக்கடலில் தொடங்கியது
புதுடெல்லி:

மலபார் கடற்படை முதல்கட்ட போர்ப்பயிற்சி, கடந்த 3-ந் தேதி, வங்காள விரிகுடாவில் தொடங்கியது. 6-ந் தேதி வரை இப்பயிற்சி நடந்தது. ‘குவாட்’ என்ற கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் இந்த பயிற்சியில் ஈடுபட்டன.

இந்த நிலையில், 2-ம் கட்ட மலபார் கடற்படை போர்ப்பயிற்சி நேற்று வடக்கு அரபிக்கடலில் தொடங்கியது. இப்பயிற்சி 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் கடற்படைகள் இதில் பங்கேற்று வருகின்றன. இந்திய குழுவுக்கு மேற்கு பிராந்திய கடற்படை உயர் அதிகாரி கிருஷ்ண சுவாமிநாதன் தலைமை தாங்கியுள்ளார்.

இந்த பயிற்சியின் முக்கிய அம்சம், இந்திய கடற்படை சார்பில் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலும், அமெரிக்க கடற்படை சார்பில் உலகின் நீண்ட போர்க்கப்பலான ‘நிமிட்ஸ்’ விமானம் தாங்கி கப்பலும் பங்கேற்பது ஆகும்.

இதுதவிர, ஐ.என்.எஸ். சென்னை, ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய போர்க்கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும், மிக்-29கே போர் விமானங்களும், உளவு விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பங்கேற்றுள்ளன.

லடாக்கில், இந்திய-சீன படைகள் இடையே கடந்த 6 மாதங்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த போர்ப்பயிற்சி நடந்து வருகிறது.
Tags:    

Similar News