செய்திகள்
நடிகர் சவுமித்திர சாட்டர்ஜி

பழம்பெரும் வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜி காலமானார்- முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்

Published On 2020-11-15 09:02 GMT   |   Update On 2020-11-15 09:02 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜி காலமானார்.
கொல்கத்தா:

மூத்த வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜி (வயது 85) கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. 

அத்துடன் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பியல் பாதிப்பு என அடுத்தடுத்த பாதிப்புகளால் அவரது உடல்நிலை கடந்த சில தினங்களாக கவலைக்கிடமாகவே இருந்தது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது.

பத்ம பூஷண், தாதாசாகேப் பால்கே விருது, சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர் சாட்டர்ஜி.

சாட்டர்ஜியின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச, இந்திய மற்றும் வங்காள சினிமா இன்று ஒரு மிகப்பெரிய கலைஞனை இழந்துள்ளது. இன்று வங்காளத்திற்கு இது ஒரு சோகமான நாள். அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்படும் என மம்தா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News