செய்திகள்
ஆயுர்வேத நிறுவனங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி

கொரோனா காலத்தில் சர்வதேச அளவில் ஆயுர்வேத மருந்துகளின் தேவை அதிகரிப்பு -மோடி

Published On 2020-11-13 06:43 GMT   |   Update On 2020-11-13 06:43 GMT
ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் பால், அஸ்வகந்தா மூலிகை, காதா போன்ற நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர்களை உட்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:

தன்வந்திரி ஜெயந்தியான நவம்பர் 13ம் தேதி தேசிய ஆயுர்வேத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று ஐந்தாவது ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜெய்ப்பூரின் தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆகியவற்றை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பாரம்பரிய மருந்துகள் குறித்த ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய மையத்தை நிறுவ இருப்பதாக தெரிவித்தார். 

கொரோனா காலத்தில் ஆயுர்வேத தயாரிப்புகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் இருந்து மஞ்சள் மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்தது. நம் நாடு அதிக மக்கள் தொகை கொண்டதாக இருந்தாலும், கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் பால், அஸ்வகந்தா மூலிகை, காதா போன்ற நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர்களை உட்கொள்கிறார்கள் என்றும் மோடி தெரிவித்தார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த விழாவில் முதல்வர் அசோக் கெலாட், குஜராத்தில் நடந்த விழாவில் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News