செய்திகள்
பத்மநாபசாமி கோவில்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

Published On 2020-10-18 23:04 GMT   |   Update On 2020-10-18 23:04 GMT
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு, கோவில் நடை மூடப்பட்டது.

அதே சமயத்தில் கோவில் தந்திரியின் தலைமையில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தது. கோவிலின் வளாகத்தை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. தூய்மை பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடை சட்ட விதிகளின் படி பக்தர்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கிழக்கே உள்ள நடை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன் லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முடியாதவர்கள் கோவிலின் கிழக்கு நடை பகுதியில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நவராத்திரி விழாவையொட்டி, குமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள சரஸ்வதி தேவியின் சிலை, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் வெளியே உள்ள கொலு மண்டபத்தில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் சரஸ்வதி தேவியை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News