செய்திகள்
விசாரணைக்கு சென்ற போலீசார்

இன்னொரு ஹத்ராஸ்... உ.பி.யில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரம்

Published On 2020-10-01 03:24 GMT   |   Update On 2020-10-01 03:24 GMT
உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் சம்பவம் போன்று பல்ராம்பூர் அருகே ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்லிவிடுவார் எனக்கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹத்ராஸ் சம்பவம் போன்றே உத்தர பிரதேசத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. பல்ராம்பூர் அருகே வேலைக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அத்துடன் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி உள்ளனர். செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

பலத்த காயமடைந்த அந்த பெண்ணை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நேற்று உடலை தகனம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஹத்ராஸ் சம்பவம் போன்று இந்த சம்பவத்தை யோகி ஆதித்யநாத் அரசு மூடி மறைக்க முயற்சிக்க வேண்டாம், குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சிவசேனாவின் சஞ்சய் ராவத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் கவலைகளையும், கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். 
Tags:    

Similar News