செய்திகள்
கேரளா விமான விபத்து

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பீடு?

Published On 2020-08-09 13:34 GMT   |   Update On 2020-08-09 13:34 GMT
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோழிக்கோடு:

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு மத்திய மற்றும் கேரள அரசு சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரள அரசு சார்பில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின், பல்வேறு காப்பீடு திட்டங்கள் உள்ளதால், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு தொகை கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை இயக்குநர் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆய்வு அறிக்கை  அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

விமானப் பயணச் சீட்டு பெறும்போது பயண காப்பீடு வழங்கப்படுவதுடன், கிரெடிட் கார்டு வைத்துள்ள பயணிகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டிருப்பதால் இழப்பீடு தொகை கிடைக்கும். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 75 லட்சம் முதல் அதற்குமேல் இழப்பீடு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே மங்களூரு விமான விபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை காப்பீடு தொகை வழங்கப்படாத நிலையில், கோழிக்கோடு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News