செய்திகள்
பாந்திரா பகுதியில் கடல் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்.

நிசர்கா புயல்: ஆபத்தில் இருந்து மும்பை தப்பியது எப்படி?

Published On 2020-06-04 03:03 GMT   |   Update On 2020-06-04 03:03 GMT
நிசர்கா புயல் ஆபத்தில் இருந்து மும்பை தப்பியது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை :

அரபி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. அரபி கடலில் உருவான 'நிசர்கா' புயல் சுமார் 120 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே கொரோனாவின் கோர பிடியில் சிக்கி உள்ள மும்பைக்கு நிசர்கா புதிய தலைவலியானது.

எனினும் நிசர்காவால் ஏற்படும் இழப்புகளை தடுக்க மும்பையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு இருந்தன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படையினர் மற்றும் போலீசார் தயார் நிலையில் இருந்தனா்.

மும்பை மாநகராட்சி முன் எச்சரிக்கை பணிகளில் முழு வீச்சில் இறங்கி இருந்தது. இந்தநிலையில் அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் கரையை கடந்தது.

மும்பை நகரில் மணிக்கு 49.5 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக கொலபா வானிலை ஆய்வு மையமும், புறநகரில் 22.2 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக சாந்தாகுருஸ் வானிலை ஆய்வு மையமும் தகவல் வெளியிட்டுள்ளன. இதனால் மும்பை பெரும் ஆபத்தில் இருந்து தப்பியது. மும்பையை பொறுத்தவரை பல இடங்களில் மரங்கள் சாய்தன. எதிர்பார்த்தபடி மிகப்பெரிய சேதங்கள் ஏற்படவில்லை.

இந்தநிலையில் மும்பை ஆபத்தில் இருந்து தப்பியது குறித்து ஸ்கைமட் என்ற தனியார் வானிலை தகவல் நிறுவன அதிகாரி கூறுகையில், ‘‘புயல் மும்பையை 120 கி.மீ. வேகத்தில் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் அலிபாக்கின் தெற்கு பகுதி நோக்கி நகர்ந்தது. மும்பையை பொறுத்தவரை இது எப்போதும் பெய்யும் பருவ கால மழை போன்றது தான்’’ என்றார்.

நிசா்கா புயல்வடக்கு நோக்கி நகர்ந்து இருந்தால் மும்பைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என மற்றொரு அதிகாரி கூறினார். 
Tags:    

Similar News