செய்திகள்
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி

ராஜ்பவனில் சிக்கன நடவடிக்கை: கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு

Published On 2020-05-29 03:54 GMT   |   Update On 2020-05-29 03:54 GMT
கொரோனா எதிரொலி காரணமாக ராஜ்பவனில் செலவினங்களை குறைக்க சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
மும்பை :

கொரோனா வைரசால் நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆட்கொல்லி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வரும் நிலையில், அந்த செலவை ஈடுகட்டும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா அரசு செலவினங்களை அதிரடியாக குறைத்தது.

இதன்படி இந்த நிதியாண்டின் எந்தவொரு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கன அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்தநிலையில், ராஜ்பவனிலும் செலவினங்களை குறைப்பதற்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடப்பு நிதியாண்டில் ராஜ்பவனில் புதிதாக பெரியளவில் கட்டுமான மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள கூடாது.

மறுஉத்தரவு வரும் வரை ராஜ்பவனுக்கு வேலைக்காக புதிதாக ஆள்சேர்ப்பு நடத்த கூடாது. ராஜ்பவனுக்கு புதிதாக கார்கள் வாங்கும் திட்டம் தள்ளி வைக்கப்படுகிறது.

வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புனேயில் உள்ள ராஜ்பவனில் நடைபெறுவதாக இருந்த சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.

ராஜ்பவனுக்கு வரும் மிக முக்கிய விருந்தினர்களுக்கு (வி.வி.ஐ.பி.) நினைவு பரிசுகள் வழங்கும் நடைமுறை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தப்படுகிறது.

மேலும் வி.ஐ.பி. பார்வையாளர்களை பூங்கொத்துடன் வரவேற்கும் நடைமுறையும் நிறுத்தப்படுகிறது.

ராஜ்பவனில் உள்ள விருந்தினர் மாளிகை அறைகளை மலர்குவளைகளால் அலங்கரிக்க கூடாது.

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் அதிகாரிகள் பயண செலவுகளை தவிர்க்க வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டங்களை நடத்தலாம்.

இந்த சிக்கன நடவடிக்கை மூலம் நடப்பு நிதியாண்டில் ராஜ்பவன் பட்ஜெட் செலவில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேமிக்கப்படும்.

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஏற்கனவே தனது ஒரு மாத ஊதியத்தை கொரோனா தடுப்பு பணிக்கு வழங்கி உள்ளார். மேலும் ஒரு வருடத்திற்கான தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்க உறுதி அளித்துள்ளார்.

ராஜ்பவனில் செலவினங்கள் குறைப்பு ஒரு சிறிய நடவடிக்கையாக இருந்தாலும், கொரோனா பிரச்சினையில் பின்னணியில் மக்கள் படும் துன்பங்களை குறைக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News