செய்திகள்
ராம்விலாஸ் பஸ்வான்

புதிய ரேசன் கார்டு வழங்கும் திட்டம் இப்போது இல்லை: ராம்விலாஸ் பஸ்வான்

Published On 2020-02-08 02:04 GMT   |   Update On 2020-02-08 02:04 GMT
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் ஜூன் 1-ந்தேதி அமல்படுத்தப்படுவதால், இப்போதைக்கு புதிய ரேசன் கார்டு வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
புதுடெல்லி :

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய உணவுத் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஒரு துணைக் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு’ திட்டம் சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் ஜூன் 1-ந்தேதி அமல்படுத்தப்படும். கடந்த ஏற்கனவே 12 மாநிலங்களில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. மேலும் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மார்ச் மாதம் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் மூலம் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்திலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். ரேசன் கார்டுகள் ஆதார் அட்டையுடனும், ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் செல்போன் எண் கையடக்க மின்னணு விற்பனை கருவிகளுடனும் இணைக்கப்படும்.



இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்போதைக்கு இதற்காக புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் திட்டம் இல்லை. ஆனாலும் சிலர் இதுகுறித்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். புதிய ரேசன் கார்டு குறித்து குழப்பம் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம்.

தேவைப்பட்டால் இதுபோன்ற வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கும் ஒப்படைக்கலாம் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News