செய்திகள்
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் இடம் பெறும் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி

Published On 2020-01-22 21:45 GMT   |   Update On 2020-01-22 21:45 GMT
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் அய்யனார் கோவில் கொடைவிழா அமைப்பு காட்சிப்படுத்தப்படுகிறது.
புதுடெல்லி:

நாட்டின் குடியரசு தின விழா, டெல்லி ராஜபாதையில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் நடைபெறும் அலங்கார வாகன அணிவகுப்பு ஊர்வலத்தில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான அலங்கார வாகன அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, அசாம், உத்தரபிரதேசம் உள்பட 16 மாநிலங்கள் சார்பிலும், மத்திய பொதுப்பணித்துறை, ஜல் சக்தித்துறை உள்ளிட்ட 6 மத்திய அமைச்சக அலுவலகங்கள் சார்பிலும் அலங்கார வாகனங்கள் அணிவகுக்க இருக்கின்றன.

இந்த அலங்கார வாகனங்களின் உருவாக்கப் பணிகள் டெல்லியில் உள்ள ராணுவ முகாம் பகுதி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழாவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார வாகனங்கள் மற்றும் நடன, இசைக்கலைஞர்களின் கலைநிகழ்ச்சி விவரங்கள் என்ன என்ன? என்பது பற்றி நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கப்பட்டது.

இதில், தமிழக அரசு சார்பிலான அலங்கார அணிவகுப்பு வாகனத்தில் அய்யனார் கோவில் கொடைவிழாவின் காட்சி அமைப்பு சித்தரிக்கப்பட்டு உள்ளது. 17 அடி உயர பிரமாண்ட உருவத்தில் அய்யனார் அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும், கொடைவிழாவின்போது கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் நடைபெறுவது போன்ற காட்சியை ஆண், பெண் கலைஞர்கள் நிகழ்த்தி காட்டினர். இதில் பங்கேற்பதற்காக 30 கலைஞர்கள் டெல்லி வந்து உள்ளனர்.

இதைப்போல சத்தீஷ்கார் மாநிலம் சார்பில் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறையும், அசாம் மாநிலம் சார்பில் கைவினைத்திறன் காட்சிகளும், கோவா மாநிலம் சார்பில் கடல்பகுதி காட்சிகளும், இமாசலபிரதேசம் சார்பில் தசரா கொண்டாட்ட காட்சிகளும் சித்தரிக்கப்பட்டு இருந்தன.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவுக்கட்டத்தை எட்டி இருக்கிறது. பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதும், அலங்கார வாகனங்கள் அனைத்தும் 25-ந் தேதி இரவு டெல்லி ராஜபாதை பகுதிக்கு வர இருக்கின்றன. மறுநாள் குடியரசு தினத்தன்று இந்த வாகனங்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.
Tags:    

Similar News