செய்திகள்
பாராளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Published On 2019-11-17 22:24 GMT   |   Update On 2019-11-17 22:24 GMT
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
புதுடெல்லி:

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி, கடந்த மே மாத இறுதியில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சியில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியில், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலங்களை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தனது நேரடி கண்காணிப் பின் கீழ் கொண்டு வந்தது.

மேலும், இந்த கூட்டத்தொடரில் ‘முத்தலாக்’ தடை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக சமீப காலத்தில் இல்லாத வகையில் மக்களவையில் 35 மசோதாக்களும், மாநிலங்களவையில் 32 மசோதாக்களும், இரு சபைகளிலும் 30 மசோதாக்களும் நிறைவேறின.

இந்த நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், இன்று தொடங்குகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதன் நீண்ட கால கூட்டணி கட்சியான சிவசேனா விலகிய பின்னர் நடக்கிற முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தொடர், பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், காஷ்மீர் மாநில பிரிவினைக்கு பின்னர் அங்கு தொடர்ந்து அரசியல் தலைவர்கள் சிறைவைப்பு, மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய விவகாரம், பிரியங்கா காந்தி செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் தற்கொலை என பல பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு காத்திருக்கின்றன.

எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்வதற்கு அரசு தரப்பும் தயாராக உள்ளது.

இதனால் இந்த கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்ததற்காக கொண்டு வந்த அவசர சட்டத்துக்கும், இ-சிகரெட்டை தடை செய்து கொண்டு வந்த அவசர சட்டத்துக்கும் முறையான சட்ட மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அத்துடன் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்கான குடியுரிமை (திருத்தம்) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வம் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த கூட்டத்தொடரையொட்டி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று முன்தினம் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சபாநாயகர் ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் சார்பில் டெல்லியில் பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 27 கட்சிகள் கலந்து கொண்டன.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “சபையின் மிக முக்கிய வேலை, விவாதிப்பதுதான்” என கூறினார். முதல் கூட்டத்தொடரைப் போன்று குளிர்கால கூட்டத்தொடரும் பலனுள்ள விதத்தில் அமைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக நடத்துகிற விவாதங்கள்தான், அதிகார வர்க்கத்தினரை உஷார் நிலையில் வைத்திருக்கும் எனவும் அவர் கூறினார்.

காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி, அவரை பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால் அரசு தரப்பில் அதற்கு உறுதியான பதில் தரப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி விலகி உள்ள நிலையில், அதன் உறுப்பினர்களுக்கு இரு சபைகளிலும் எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்படுவதாக பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.

நவம்பர் 26-ந் தேதி அரசியல் சாசன தினம் ஆகும். இதையொட்டி அன்றைய தினத்தில் பாராளுமன்ற கூட்டுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13-ந் தேதி முடிகிறது. இந்த கூட்டத்தொடரில் விவாதங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் பஞ்சம் இருக்காது. 
Tags:    

Similar News